அநுராதபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் எலிக்காய்ச்சல் நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
நாட்டில் தற்சமயம் பெய்துவரும் மழையுடனான காலநிலை காரணமாக எலிக்காய்சல் நோய் தீவிரமடையும் சூழ்நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் அநுராதபுர மாவட்டத்தின் நிலைமையினை அறிந்து கொள்வதற்காக வேண்டி தொற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்கவை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கெப்பித்திகொள்ளாவ பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவில் 30 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வருடத்தின் பெரும் போக நெற் பயிர்ச்செய்கை காலத்திலேயே அதிகளவானவர்கள் எலிக்காய்சல் நோயினால் பாதிக்கப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் எலிக்காய்சல் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க மேலும் தெரிவித்தார்.
எலிக்காய்சல் நோயினை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தினை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக தொற்றுநோய் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

