இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் !

33 0

தைப்பொங்கல் மதங்களைக் கடந்து இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழா. இத்திருநாளில் தொன்றுதொட்டு இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கி வந்துள்ளோம். ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து விட்டன.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

பசுமை இயக்கத்தின் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அலுமினியம் பாரம் இல்லாததால் இலகுவில் கையாளக்கூடியதாக உள்ளது. உலோகம் என்பதால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் பூசப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது.

மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது.

எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாம் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவேண்டிய சமையலையும் அவ்வாறே அவசரகதியில் முடிக்க எண்ணி உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோய்களுக்கும் ஆளாகி வருகிறோம். மண்பாத்திரங்களுக்கு உடனடியாகத் திரும்;புவது கடினமாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினையர்களது வாழ்வு மேம்படவும்; உதவும் என்றார்.