முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவால், இசுருபாய கல்வி அமைச்சு முன்பாக இன்று திங்கட்கிழமை (12) காலை ஆரம்பிக்கப்பட்ட தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த போராட்டம் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதியை மறிக்காத முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தற்போது நாட்டில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தின் போது ஒலிபெருக்கி சாதனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமல் வீரவன்ச தலைமையிலான இந்த சத்தியாக்கிரக போராட்டம் இன்று காலை இசுருபாய கல்வி அமைச்சு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டால், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதவான் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

