துணை மருத்துவப் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு கோரி கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

18 0

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டில், துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி இன்று (12) கொழும்பு 07இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

“துணை மருத்துவப் பட்டத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கம்” என்ற தொனியில் ஒன்றிணைந்த மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் வரிசை அடிப்படையில் தங்களை உடனடியாக அரச சேவைக்கு உள்வாங்குவதற்கான முறையான நடைமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கறுப்பு நிறப் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் இறங்கிய மாணவர்கள், சுகாதாரத்துறையில் நிலவும் வெற்றிடங்களுக்குத் தகுதியுள்ள பட்டதாரிகளை நியமிப்பதில் நிலவும் தாமதத்திற்குத் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறிப்பாக, பல்கலைக்கழகக் கல்வி முடிந்து வெளியேறும் தங்களை நீண்டகாலமாகப் புறக்கணிப்பது அநீதியானது எனவும், தகுதி அடிப்படையிலான வெளிப்படையான நியமன முறையொன்று அவசியமானது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணமாக சுகாதார அமைச்சை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தமது நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உரிய தீர்வை வழங்கத் தவறினால், இந்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப் போவதாக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.