2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது – பதிவாளர் திணைக்களம் தகவல்

24 0

யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் சுமார் 2,200 காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 2016ஆம் ஆண்டு மரண சான்றிதழ் வழங்கும் சட்ட திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களே வழங்கப்பட்டதாகவும் பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது :

யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010இல் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2010ஆம் ஆண்டு 10ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தற்காலிக ஏற்பாடுகள் மரணங்களைப் பதிவு செய்தல் சட்ட திருத்தம் அக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரு தற்காலிக சட்ட ஏற்பாடுகளுக்கமைய, யுத்தத்தின் போது மாத்திரமின்றி, இயற்கை மரணம், யுத்த மோதல்கள், சிவில் கலவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதலே வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் சட்ட திருத்தத்தின் ஊடாக காணாமல் போனமைக்கான சான்றிதழ் (Certificate of Absence) வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் 2016இல் நிறுவப்பட்டது.

சட்ட திருத்தத்துக்கமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைக்கமைய பதிவாளர் திணைக்களத்தினால் காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்க முடியும். வழமையான மரண சான்று பதிவு சட்டத்தின் கீழ் மரணத்தைப் பதிவு செய்வதற்கு மரணித்த நபர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு, அதனை உறுதிப்படுத்துவதற்கு நபரெர்ருவர் முன்னிலையாக வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து மரண சான்றிதழ் வெளியிடப்படும். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் இதுவரையில் 2,200க்கும் மேற்பட்டோருக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 300ஐ தவிர ஏனைய அனைத்தும் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இராணுவ மரணங்களும் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1951ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் 39 – 4 ஆ உறுப்புரைக்கமைய அவசர கால சட்டத்தின் கீழ் மரண பதிவு தொடர்பில் பதிவாளர் நாயகத்துக்கு விசேட அதிகாரம் உரித்தாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 24,808 இராணுவ மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(1990-12-12 முதல் 2017-05-29 வரை) காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். எனினும் காணாமல் போனோர் அலுவலகம் மக்கள் மத்தியில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் போனோர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளும். அதனை அடிப்படையாகக் கொண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்கும் போது எமது திணைக்களத்துக்கு நபர்கள் வருவதில் குறைபாடுகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதாவது அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கமைய எம்மால் சான்றிதழ்கள் வழங்கப்படாமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் நடமாடும் சேவையை முன்னெடுக்கும் போது, எமது திணைக்களத்தின் பதிவாளர் அதிகாரியொருவர் அங்கு சேவையில் இணைக்கப்பட்டு பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் காணாமல் போனோர் அலுவலகம் – பதிவாளர் திணைக்களத்துக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களுக்கிடையிலான இடைவெளியை இனங்கண்டு அதனை சமப்படுத்துவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.