சீரற்ற வானிலை காரணமாக கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், கடல் பயணம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் மிகுந்த அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீனவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட ஏத்துக்கால் நதியாவும் பூனொச்சிமுனை துறைமுகங்களையும் சேர்ந்த மீனவர்கள், பல வாரங்களாக கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால், தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த துறைமுகப் பகுதிகளில் இருந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வருமானம் இழந்த நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை தொடர்ந்தால், தங்களது நிலை மேலும் மோசமடையும் எனக் குறிப்பிட்ட மீனவர்கள், உரிய அதிகாரிகள் தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

