எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன.
இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

