பிரான்ஸ் அரசு, 2026 ஜனவரி 1 முதல் குடியுரிமை மற்றும் நீண்டகால குடியிருப்பு அனுமதிக்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், பிரான்சில் நீண்டகாலம் தங்க விரும்பும் வெளிநாட்டினருக்கான மொழி திறன் மற்றும் குடிமைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, பல ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி பெற விரும்புவோர் குறைந்தது A2 நிலை பிரெஞ்சு மொழித் திறனை நிரூபிக்க வேண்டும்.
10 ஆண்டு குடியிருப்பு அட்டைக்கான மொழித் திறன் B1 நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பிரெஞ்சு குடியுரிமை பெற விரும்புவோர் இப்போது B2 நிலை பிரெஞ்சு மொழித் திறனை நிரூபிக்க வேண்டும். இதற்கான சான்றுகள் அங்கீகரிக்கப்பட்ட மொழித் தேர்வுகள், கல்வி சான்றிதழ்கள் அல்லது பிரான்சில் போதுமான அளவு கல்வி பெற்றதற்கான ஆதாரங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் குடிமக்கள், குடியுரிமை அல்லது நீண்டகால அனுமதி பெற 45 நிமிடங்கள் கொண்ட குடிமைத் தேர்வை எழுத வேண்டும்.
இதில் பிரான்சின் குடியரசு கொள்கைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து கேள்விகள் இடம்பெறும். குறைந்தது 80 சதவீத மதிப்பெண் பெறுதல் அவசியம்.
ஆனால், திறமையாளர் அனுமதி, அகதிகள், சர்வதேச ஒப்பந்தங்களின் பயனாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சில உடல் நலக் குறைபாடுகள் கொண்டவர்கள் இத்தேர்விலிருந்து விலக்கு பெறுவர்.
இந்த மாற்றங்கள், பிரான்சில் நீண்டகாலம் தங்க விரும்பும் வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
விதிகளை பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தற்காலிக அனுமதிகளையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும், இது அவர்களின் தங்கும் காலத்தை குறைக்கக்கூடும்.

