“திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002-03-ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில்தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.

