காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவ்விளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) அன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
இந்த கத்தி குத்து தாக்குதலில் 25 வயதுடைய ஹைராத் நகரிலுள்ள அஸி அஸ்பாக என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான வியாழக்கிழமை (18 காலையில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு உள் நுழைந்த இளைஞன் ஒருவர் குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த வரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கத்தி குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் கை கலப்பு இடம் பெற்று வந்த பின்னணியில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

