“இதுதான் ஜனநாயகமா?” – திருப்பூரில் கைதுக்கு முன் அண்ணாமலை ஆவேசம்

13 0

குப்பை பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் அருகே இடுவாய் சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களை கைது செய்ததைக் கண்டித்து அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்துக்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அண்ணாமலை உட்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் இன்று கைது செய்தனர். அப்போது பொது மக்களிடையே அண்ணாமலை பேசியது: “நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தக் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுதான் ஜனநாயகமா? பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தைரியமாக சுற்றுகிறார்கள். ஆனால், மக்களுக்காக போராட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில்லை. அரசின் தவறான உத்தரவுகளை காவல் துறை பின்பற்றக் கூடாது.

திருப்பூர் மாநகராட்சி ரூ.50 மதிப்பிலான துடைப்பத்தை ரூ.450-க்கு வாங்கியுள்ளது. ஊழல் செய்வது மட்டுமே மேயரின் பணியாக உள்ளது. எனவே, மேயர் வீட்டின் முன்பு குப்பையைக் கொட்டுவோம். அதிகம் குப்பை தேங்கினால், நிறைய வண்டிகள் வாங்க வேண்டியிருக்கும். அப்போது கமிஷன் அதிகமாக கிடைக்கும். அதனால்தான் குப்பையை அகற்றாமல் சேர்த்து வைத்துள்ளனர்.

மக்களின் சுகாதாரம், குடிநீர் பிரச்சினைகளில் மேயருக்கு அக்கறை இல்லை. ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சர்வேயில், அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் இடம்பெற்றுள்ளன. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் பொதுமக்கள் பதில் சொல்வார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.

போராட்டதில் பங்கேற்ற பாஜக மாவட்டத் தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜகவினர், கிராம மக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.