இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
2017-2018ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை (Tenders) இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி கேள்வி மனுக்களை செயற்படுத்தியதன் ஊடாக, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்து நீதிமன்றத்தில் மு்ன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

