அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

5 0

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.