கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் – ட்ரம்ப்பின் சமாதானம் என்னவாயிற்று?

6 0

அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை கம்போடியா மீதான தாக்குதல் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், தாய்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் இன்று காலை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘‘எங்கள் நிலத்துக்கும் மக்களுக்கும் இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாங்கள் உணரும் வரை தாய்லாநதின் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இன்று காலை எங்கள் நடவடிக்கைகள் எங்களின் இந்த நிலைப்பாட்டை உணர்த்தி உள்ளன’’ என தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் தாக்குதலை அடுத்து அமெரிக்காவை கம்போடியா விமர்சித்துள்ளது. கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே உள்ள பகையை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்த போதிலும், தாய்லாந்தின் படைகள் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்வதாக கம்போடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ‘‘இன்று (டிச.13) தாய்லாந்தின் இரண்டு எஃப்-16 போர் விமானங்கள், கம்போடிய இலக்குகள் மீது ஏழு குண்டுகளை வீசியது. தாய்லாந்து படைகள் குண்டுவீச்சை இன்னும் நிறுத்தவில்லை. தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி வரை தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்திய கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் குறித்த விவரங்களை கம்போடிய பாதுகாப்பு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.

அதேநேரத்தில், இந்த சமீபத்திய தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும், இந்த தாக்குதல் காரணமாக இரு நாட்டு எல்லையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக்கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.

தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்தச் சூழலில் கடந்த ஜூலை 24-ம் தேதி கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் குற்றம் சாட்டிய தாய்லாந்து, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, கம்போடியாவும் பதில் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை தான் ஏற்படுத்தியதாக ட்ரம்ப் கூறினார். இந்த அறிவிப்பை அடுத்து தணிந்து இருந்த மோதல் தற்போது மீண்டும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.