நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீள கட்டியெழுப்புவதற்கு உதவும் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பல ஆண்டுகளாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை பலப்படுத்துவதற்காக அரசு பல்வேறு சலுகை கடன் திட்டங்கள் அமுல்படுத்தியுள்ளது.
அவற்றில் கைத்தொழில் மற்றும் உற்பத்தி துறைகளில் முதலீடு செய்வதற்காக SMILE – கட்டம் II, சுற்றாடல் நேய நிதியாக்கலுக்காக E-FRIEND கட்டம் II மற்றும் அனைத்து நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு விரிவான மற்றும் இலகுவான பிரவேசத்துடன் நிதியுதவி வழங்கும், அரசினால் நிதி வழங்கப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை மீண்டும் உயிரோட்டம் பெற செய்தல் (RE-MSME) ஆகிய கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2026 ஆண்டிலிருந்து RE-MSME PLUS திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீண்டும் உயிரூட்டுவதற்காக பேரிடர் நிவாரண (RE-MSME – Disaster Relief) கடன் திட்டம் எனும் பெயரில் புதிய கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்கீழ் அண்ணளவாக 130,000 தொழில்முயற்சிகளுக்கு உடனடி மற்றும் மத்திய கால நிதியுதவி வழங்கும் செயன்முறையை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேசக் கடன் திட்டத்தின் கீழ் நுண் தொழில்முயற்சிகளுக்கு ருபா 250,000/- மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு ஆகக்கூடியது ரூபா 1,000,000/- தொகையை 06 மாத சலுகைக் காலத்துடன் வருடாந்தம் 3% வட்டி விகிதத்தில் 03 ஆண்டு காலப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடன் திட்டத்தை அமுல்படுவதற்கு RE-MSME – Disaster Relief நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

