பேரிடருக்கு பின்னரான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்திலிருந்து நன்கொடை பெறுதலுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நோய் பரம்பல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் பேரிடரின் பின்னர் உயிர்காப்பு சேவைகளை உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு அபிவிருத்தி நன்கொடை வழங்குவதற்காக 2009-04-01 திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியம் நிறுவப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக முகங்கொடுத்த பேரிடர் தொடர்பாக செயற்படும் அவசர பதில்வினையாற்றல் திட்டத்துக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்தின் கீழ் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. மேற்குறித்த நன்கொடை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உயிர்ப் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய, மேற்குறித்த நன்கொடையை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்புடைய உடன்படிக்கையை எட்டுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

