மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் இன்று (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் , அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது அவர், மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

