எம் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் நாளே ‘நவம்பர் 27 மாவீரர் நாள்’ அந்தவகையில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் பெல்சியம் நாட்டின் அன்வேர்ப்பன் மாகாணத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் உணர்வுபூர்வமான முன்னெடுக்கப்பட்டது.
முதல் நிகழ்வாகப் பொதுச்சுடரினை மாவீரர் லெப்ரினட் குமுதா அவர்களின் சகோதரி திருமதி.மேரி அருள் சைலா ஜெயராஜா அவர்கள் ஏற்றி வைத்ததனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடியினைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு . அமலதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியத்தலைவரின் 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் உரையும் அனைத்துலகத் தொடர்பகத்தின் ‘கொள்கைவகுப்புரையும்’ வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது. மணிஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து, முதன்மைச்சுடரினை லெப்ரினட் ஈழவருவி தாயார் திருமதி ரவிச்சந்திரன் சந்திரவதனா அவர்கள் ஏற்றிவைக்க, துயிலுமில்லப்பாடல் இசைக்க அனைத்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கும் சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கமும் இடம் பெற்றது.
மாவீரர்களின் ஈகங்களைப் போற்றிய சமகால சிறப்புப் பேச்சினைத் திரு.மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி வழங்கினார். தாயக விடுதலைக்காக வீரகாவியமான மாவீரர்களைப் போற்றி விடுதலைக் கீதங்கள், எழுச்சிக்கீதங்கள், கவிதைகள், கவியரங்கம், சிந்துநடைக்கூத்து, நடனம் எனப் பலநிகழ்வுகளும் இடம் பெற்றன. மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன், ‘அனைத்தலகத் தொடர்பகம்’ வெளியீட்டுப்பிரிவினரின் ‘ தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம்’ வெளியீடு செய்யப்பட்டது. இறுதியாகத் உறுதிமொழியேற்றலுடன்தேசியக்கொடி கையேற்றப்பட்டு, எழுச்சியுடன் நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.












