நீர் மட்டம் அதிகரித்தாலும் பாரிய பாதிப்பில்லை ; எந்த நீர்த்தேக்கமும் அபாய நிலைமையில் இல்லை

12 0

களனி கங்கை பெருக்கெடுத்ததால் கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும் அது சுமார் 5 அங்குலம் என்ற ரீதியில் குறைந்தளவிலானதாகவே காணப்படும். செவ்வாய்கிழமை (2) முதல் வெள்ள நீர் மட்டம் குறைவடையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்தார்.

பிரதான ஆறுகளின் நீர் மட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் வெள்ள நிலைமை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

களனி கங்கை

களனி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக கொழும்பு அதிக வெள்ளம் அபாயம் மிக்கதாகக் காணப்படுகிறது. வரும் 24 மணித்தியாலங்களுக்கும் (நேற்று நண்பகலிலிருந்து) குறித்த வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படும். வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும் அது சுமார் 5 அங்குலம் என்ற ரீதியில் குறைந்தளவிலானதாகவே காணப்படும். நாளை செவ்வாய்கிழமை முதல் வெள்ள நீர் மட்டம் குறைவடையத் தொடங்கும் என ஊகிக்கப்படுகிறது. ஹங்வெல்ல மற்றும் அதற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் வெள்ள நீர் மட்டம் அதிகரிக்காது. குறித்த பகுதிகளில் வெள்ளம் சிறிது சிறிதாக வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

அத்தனகல ஓயா

அத்தனகல ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக கம்பஹா நகர் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இன்று பிற்பகல் வெள்ள நீர் மட்டம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலையளவில் கம்பஹாவில் தாழ் நிலப்பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய வாய்ப்புள்ளது.

மகா ஓயா

மகா ஓயா நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக கிரிஉல்ல நகரிலேயே அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. நேற்றிலிருந்து அங்கு வெள்ள நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை கிரிஉல்ல நகரில் வெள்ளம் முற்றாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்த பிரதேசத்துக்கு கீழுள்ள படல்கம மற்றும் கட்டான போன்ற பிரதேசங்களுக்கு சிறியளவிலான பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமை தற்போதுள்ளதை விட மோசமடையக் கூடியளவில் அந்த பாதிப்புக்கள் இருக்காது.

களுகங்கை

களுகங்கையின் நீர் மட்டம் களுத்துறை பிரதேசத்தில் குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது. இரத்தினபுரியில் வெள்ள நீர் மட்டம் குறைவடையும். தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் தற்போது செக்கனுக்கு 100 000 கன அடி என்றவாறு வான் பாய்கின்றது. அதனைக் கட்டுப்படுத்தி இன்று காலை வான் பாயும் அளவைக் குறைக்க முடியும். சிலாபம் மாவட்ட வைத்தியசாலையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று அங்கும் வெள்ள நீர் வழிந்தோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்வத்து ஓயா

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களிலும் வான் பாய்கின்றமையால் மல்வத்து ஓயாவை அண்மித்து அநுராதபுரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு இன்றும் வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படும். இன்று மாலை நீர் வழிந்தோட ஆரம்பிக்கும். நாளை காலை முழுமையாக வெள்ளம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலா ஓயா

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் செக்கனுக்கு 100 000 கன அடி என்றவாறு கலா ஓயாவுக்கு வான் பாய்கின்றது.  தற்போது செக்கனுக்கு 60 000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெலுவாங்குளம் மற்றும் கலாஓயா, நொச்சியாகம பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியிருந்தது. தற்போது அந்த நிலைமையும் குறைவடைந்து வருகிறது.

மகாவலி கங்கை

கடந்த நாட்களில் பதிவாகிய அதிக மழைவீழ்ச்சியைக் கருத்திற் கொண்டு முன்னதாகவே வான் கதவுகள் திறக்கப்பட்டதால் எந்தவொரு நீர்த்தேக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மகாவலி கங்கையை அண்மித்து காணப்படும் இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள நிலைமை தற்போதும் அவ்வாறே காணப்படுகிறது. இன்று அந்த நிலைமை தொடரும். திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய வெள்ள நிலைமை காணப்படுகிறது.

மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பொலன்னறுவையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு நேற்று வெள்ள நீர் மட்டம் சற்று குறைவடைந்திருந்தது. மின்னேரியா, கவுடுல்ல நீர்த்தேக்கங்களில் தொடர்ந்தும் வான் பாய்கின்றது. எனினும் வெள்ள நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக எந்த பிரதேசத்தில் வெள்ளத்தால் பாரிய அனர்த்த நிலைமைகள் எவையும் இல்லை. தற்போதுள்ள வெள்ள நீர் மட்டம் உயர்வடையாது என்றார்.