பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள்! 2025

65 0

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தேசத்தின் புதல்வர்களை பின்லாந்து வாழ் தமிழ் மக்கள் நினைவேந்தி வழிபட்டனர். எமது தேசத்தின் எல்லைச்சாமிகளாக நின்று, எமது மண்ணை எதிரிகள் ஆக்கிரமிக்காமல் தடுத்து நிறுத்தி, தங்களின் உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களே உங்களிற்குத் தலைவணங்குகின்றோம் என்னும் பேரெழுச்சியுடன் கலந்த செய்தி உறவுகளின் உள்ளத்தில் தோன்றி கண்வழியே கண்ணீராகக் கசிந்தது. பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உரையுடன், தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தின் 2025ம் ஆண்டு மாவீரர்நாளிற்கான கொள்கை வகுப்பு பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் உறவுகள் கண்ணீர்மல்கி கை தொழ, மணியோசை எழுப்பி, துயிலுமில்லப் பாடல் இசைக்கப்பட்டது. சமகாலத்தில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர்களிற்கான சுடரை பெற்றோர் உரித்துடையோர் ஏற்றினர். தொடர்ந்து மலர்வணக்கத்துடன், விடுதலைப் போராட்டம் தொடர்பான எழுச்சிமிகுந்த கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. தேசியக்கொடி கையேற்றலுடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவடைந்தது.