தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 தூய்மைப் பணியாளர்களின் உடல்நிலை குறித்து, தினமும் காவல் நிலையத்துக்கு அறிக்கை அளிக்க, உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின், 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்களான பாரதி, கீதா, ஜெனோவா மற்றும் வசந்தி ஆகிய 4 பேர் அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, போராட்டத்தில் ஈடுபடும் 4 பேரின் உடல்நிலையை பரிசோதித்த ஆவடி அரசு மருத்துவமனை மருத்துவர், அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தார்.
இந்த அறிக்கை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் தாக்கல் செய்த காவல் துறை தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், “அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பதிலாக வேறு 4 நபர்கள் உண்ணாவிரதத்தை தொடர அனுமதிக்கலாம்” என கேட்டுக் கொண்டார். ஆனால், 4 பேரின் உடல் நிலை இயல்பாக உள்ளதாக உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் மூலம் 4 பேரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனியார் மருத்துவரின் அறிக்கையில், 4 பேரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, 4 பேரின் உடல் நிலை குறித்து தினமும் மாலை 7 மணிக்கு அம்பத்தூர் போலீஸாருக்கு அறிக்கை அளிக்கும்படி, உழைப்போர் உரிமை இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

