இளையான்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நெருக்கடியால் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ. 4-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
அதற்கான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்தனர். தற்போது பூர்த்தி செய்த படிவங்களை சேகரித்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த படிவங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இப்பணியை உயர் அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு உதவியாளர் (வருவாய் ஆய்வாளர்) பகவதி ராஜா(38) பணிச்சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று அவர் அலுவலகத்தில் கையில் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றார்.
ரத்தம் வெளியேறிய நிலையில் சக ஊழியர்கள் அவரை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து இளையான்குடி போலீஸார் விசாரிக்கின்றனர். பகவதிராஜை பொதுப் பிரிவிலிருந்து தேர்தல் பிரிவுக்கு மாற்றிய போதே தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அதையும் மீறி அப்பிரிவுக்கு மாற்றிய நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
அலுவலர் சங்கம் கண்டனம்: இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழரசன் கூறியதாவது: வருவாய் ஆய்வாளர் பகவதி ராஜா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைத்துநிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர்.
வருவாய்த்துறையினரை நவீன கொத்தடிமைகளாக மாற்றிய தேர்தல் ஆணையம், உயர் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். பணிச்சுமையை குறைத்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று கூறினார்.

