ஹொங்கொங்கில் பாரிய தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு ; 26 பேர் கவலைக்கிடம் ; 279 பேரை காணவில்லை!

36 0

சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று (26) பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தீ விபத்தில் சிக்கி 26 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 279 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று பகல் திடீரென தீ பரவியது.

கட்டடத் தொகுதியில் படுவேகமாக தீ பரவியதில் 5 கட்டடங்கள் முழுவதுமாக எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பல மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்து காரணமாக அங்கிருந்த சுமார் 700 பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், 14 பேர் தீயில் உடல் கருகி இறந்துவிட்டதாக நேற்றை தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டடத் தொகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் மூங்கில் சாரம் அமைத்து வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தீ பரவியிருந்தது. தீ பரவியதற்கான காரணம்  இதுவரை உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், தீ பரவலை அதிகப்படுத்த மூங்கில சாரமே காரணம் என்ற அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.