போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

25 0

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள்  வன்னிக்கு வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை  (22) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

ஊடகவியலாளர்களான சிவராம் ,நடேசன், சுகிர்தராஜா  ஆகியோர் உஊடகத்துறைக்காக தமது உயிரை தியாகம் செய்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த சபையில் எனது அஞ்சலி தெரிவிக்கின்றேன்.

ஊடகவியலாளர்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. வீட்டுத்திட்டம் இல்லை. முறையான சம்பளத்திட்டம் இல்லை.  ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியம் மறக்கப்பட்டுள்ளது.  ஊடகவியலாளர்களுக்கு வங்கிக்கடன்கள் மறுக்கப்படுகின்றன.

எனவே இவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். போரினால் உள ரீதியாபதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வன்னியில் குறிப்பாக மன்னார்,முல்லைத்தீவில் வைத்தியசாலை  பணிகள் மந்த கதியில் உள்ளன.

வைத்தியர்கள், தாதியர்கள் , ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றபோதும் வைத்தியசாலைகளில்  போதிய வளங்கள் இல்லாதுள்ளன. இந்த விடயத்தில் ஆளணிப் பற்றாக்குறையை சொல்வதா,கட்டிடப் பற்றாக்குறையை சொல்வதா, இயந்திர பற்றாக்குறையை சொல்வதா? இங்கு ஒன்றுமே இல்லை.

எந்த அரசாங்கமாக  இருக்கலாம் இந்தத் தூதரகங்களாக இருக்கலாம் இவர்களுக்கு வன்னிக்குள் வருவதென்பது பெரிய கஷ்டமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் அங்குதான் இருக்கின்றார்கள்,ஆனால் வருகின்றார்கள் இல்லை. ஒரு சில தூதுவர்களைத் தவிர  ஏனையவர்கள் வன்னிக்குள் வருவதேயில்லை. அல்லது வருவது மிகக்குறைவு.

எனவே அமைச்சர்கள் தூதுவர்கள்  வன்னிக்கு வர வேண்டும். அந்த மக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சுகாதார அமைச்சர் மன்னார், முல்லைத்தீவிற்கு வரவேண்டும். மனித வளங்களை எடுத்தால் மயக்கவியல் நிபுணர்கள்  இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் இன்னும் வரவில்லை. அம்பியூலன்ஸ் பற்றாக்குறை உள்ளது. கர்ப்பிணித்தாய்மார் குழந்தைப்பேறுக்காக யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவுக்கு செல்லவேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் செல்வதானால்  2 மணித்தியாலம் வேண்டும். ஆகவே இது  தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சிடிஸ்கேனார் ஒன்றைத்தருவதாக கடந்த முறை மன்னாருக்கு வந்தபோது சுகாதார அமைச்சர் கூறினார்.

அதற்கான கட்டிடம் உள்ளது. சிடிஸ்கேனார்தான் இல்லை. வைத்தியர்கள்,தாதியர்கள், ஊழியர்கள் உண்மையில் மிகவும் அர்ப்பணிப்புடன்  சேவை செய்கின்றார்கள். ஆனால் மன்னார் வைத்தியசாலைக்கு மக்கள் போகத் தயங்குகின்றார்கள்.

உயிருடன் போகும் தாம் சடலமாகவே வெளியே வரவேண்டியேற்படுமென பயப்படுகின்றார்கள். அங்கு போதிய வளங்கள், வசதிகள் இல்லாது எப்படி வைத்தியர்கள் தமது கடமையை செய்ய முடியும்?தென்னிலங்கையிலிருந்து சிங்கள வைத்தியர்கள் எமது இடங்களுக்கு விரும்பி செல்கின்றார்கள்.

ஆனால் தமிழ் வைத்தியர்கள் பல்கலைக்கழக படிப்பு முடிந்தவுடன் வெளிநாடு செல்கின்றார்கள். அந்த வகையில் சிங்கள வைத்தியர்கள், தாதியர்களை  நான் பாராட்டுகின்றேன். மன்னர் ஆதார வைத்தியசாலை கஷ்டப் பிரதேச வைத்தியசாலையாக அறிவிக்கப்ட்டுள்ளதால் அங்கு செல்லும் வைத்தியர்கள் 6 மாதங்களில் திரும்பி விடுகின்றார்கள்.

ஆகவே கஷ்டப் பிரதேச வைத்தியசாலை பட்டியலிலிருந்து மன்னார் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டால்தான் வைத்தியர்கள் அங்கு நிரந்தரமாக இருப்பார்கள் இந்தியா முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு யூத முன்வந்துள்ளது. எனவே அதற்கான திட்டங்களை காலம்தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்றார்.