டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இப்படியே தொடர்ந்தால், டெல்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை (DSIIDC) மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் ப்ரிதம் சிங் அடங்கிய அமர்வு, DSIIDC தாக்கல் செய்த நிலை அறிக்கைகளில் உள்ள தாமதங்களைக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.ரூ. 2.5 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதும், எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டங்களும் இறுதி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே நிலுவையில் உள்ள ரூ. 2.5 கோடி நிதியை இரண்டு வாரங்களுக்குள் நிதியை விடுவிக்குமாறு DSIIDC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

