சுகாதார சேவை தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன. 350 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மருந்து விநியோகத்தில் எந்நிலையிலும் தட்டுப்பாடு ஏற்படாதெனன சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் சுகாதார சேவைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார சேவை தொடர்பில் பொது கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கும் ஆரம்பக்கட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒருசில ஊடகங்கள் சுகாதார சேவை குறித்து திட்டமிட்ட வகையில் போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன. அண்மையில் தேசிய பத்திரிகை ஒன்று அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டினால் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தம் என்று செய்தி வெளியிட்ட்டது.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் அது போலியான செய்தி என்று உறுதிப்படுத்தப்பட்டு குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டது. தவறான செய்தியை பிரசுரித்ததாக அந்த ஊடக நிறுவனம் மறுநாள் செய்தி வெளியிட்டது. போலியான செய்தியை தலைப்புச் செய்தியில் வெளியிடுகிறார்கள். திருத்தச் செய்தியை எங்கோவொரு பக்கத்தில் சிறியதாக பிரிசுரிக்கிறார்கள்.சுகாதார சேவை குறித்து போலியான செய்திகளை வெளியிடும் போது நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள்.
மருந்து தட்டுப்பாடு பற்றி எதிர்க்கட்சியின் உறுப்பினர் விடயங்களை முன்வைத்தார். பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்துவதற்குரிய வசதிகள் கிடையாது. இதற்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.புதிய மருந்து களஞ்சியசாலைகளை அமைப்பதற்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
350 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மருந்து விநியோகத்தில் எந்நிலையிலும் தட்டுப்பாடு ஏற்படாது. சுகாதார உத்தியோகத்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் 20 அல்லது 10 வருடகாலம் பழமையானது. இந்த கோரிக்கைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். அதற்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் நோக்கங்களை புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

