தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025.

94 0

22.11.2025

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025.

“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து
நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
தமிழீழத் தேசிய இனத்தினது அடையாளமாகவும் அதன் தொன்மையானது பேரொளி கொள்ளும் எமது தேசவிடுதலையைத் தங்களுடைய உயிரினும் மேலாகக்கொண்டு, பூமிப்பந்திலே அதன் சுதந்திர அடையாளத்தை நிறுவிட பேரவாக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவரது சிந்தனையின் வழிநின்று அதில் தம்மையும் இணைத்து, வீரமிக்க மனவுறுதியோடு களம் பல கண்டு, வீரச்சாவினை அணைத்திட்ட அற்புதமான மாவீரர்களின் வரலாற்றுப் பாதையில் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் மாவீரர்களை நெஞ்சுருகி, நெய் விளக்கேற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நாளான 27 நவம்பர் 2025 இற்கான நிகழ்வுகள் எம்மை அண்மித்து வருவதையும், அதற்கான முன்னேற்பாடுகளோடு தாயக, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்துவரும் அனைவரும் ஈடுபட்டுவருகின்றோம்.
மாவீரர்களின் பெற்றோர்களே, உரித்துடையோர்களே!
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போராட்டத்தில், உயர்ந்த ஈகமாக, தங்கள் உயிரீந்த மாவீரர்கள் விடுதலைத்தாகத்தோடு மீளாத்துயில் கொள்கின்றார்கள். தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு இன்றும் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இவ்வாண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அம்மதிப்பளிப்பு நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோரைக் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
தமிழீழம் என்ற இலட்சியத் தாகத்தைச் சுமந்து, விழிமூடி துயிலும் ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கி, இவ்வாண்டின் மாவீரர் நாள் நிகழ்வுகளோடு தம்மை முழுமையாக ஒன்றித்து ஈடுபடத் தயாராகிவரும் உறவுகளே, தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் இனவாத சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் சிதைத்தழிக்கப்பட்ட போதிலும் அவர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி, பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் தாயகத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலும்; புலம்பெயர்தேசங்களிலும்;; மக்கள் தமது பிள்ளைகளிற்கும் உரித்துடையோரிற்கும் வணக்கம் செலுத்தத்தயாராகி வருகின்றார்கள். இவ்வேளையில், புலம்பெயர்தேசங்களிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் உறவுகள், பேரெழுச்சியுடன் மாவீரர்நாளில் திரள்வதே தமது வாழ்விடநாடுகளின் கவனத்தை உணர்வோடு ஈர்க்கும்.
எமது வீரவிடுதலை வரலாறு, எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டுள்ளது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில், பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து, எம்மைத் தலைநிமிரவைத்து, வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே! இம் மாவீரர்களை நினைவேந்திடும் தேசிய மாவீரர்நாளான நவம்பர் 27இல் நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்துவதோடு, தமிழீழம் விடுதலையடையும்வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோமாக!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.