விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற “விசேட தேவையுடையவர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் (German Federal Ministry for Economic Cooperation and Development) சார்பாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) மற்றும் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation – SDC) ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கையின் விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது தொழில் வாய்ப்புக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையவர்கள் தங்களது சுயவிவரக் கோவையை சமர்ப்பித்தனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
விசேட தேவையுடையவர்களின் தொழில் வாய்ப்புகளில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களைக் கண்டறிந்து அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அதேவேளை நாம், விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு விசேட தேவையுடையவருக்கும் தனித்துவமான திறன்கள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும்.
விசேட தேவையுடையவர்களுக்குச் சிறந்த தொழிற்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சி திட்டம் (VTSL) உட்பட பல தரப்பினர் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, விசேட தேவையுடையவர்களுக்காக சிறந்த தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அமைவதற்கு பல வழிமுறைகளை உருவாக்கிக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தொழில்நுட்பத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறைகளில் விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டத்திலும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக பல கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். விசேட தேவையுடையவர்களுக்கு கல்வி மிக அவசியம்.
விசேட தேவையுடையவர்களின் இலட்சியத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பங்களிப்பு வழங்கும் என நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.


