மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது.
அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம். ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

