யாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக

73 0

வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது.

‘விஜய் மக்கள் இயக்கத்தை’ வழி நடத்திய புஸ்ஸி ஆனந்தை மட்டுமே மலைபோல் நம்பி தவெக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் ஆனந்தை அமர்த்தினார். ஆனால், மன்றத்தை கட்டி இழுப்பது போல் கட்சியை அவரால் கட்டி இழுக்க முடியவில்லை. பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகளை ‘விற்பதாக’ ஆங்காங்கே புகார்கள் வெடித்தன.

விஜய்க்கும் தங்களுக்கும் இடையில் தடுப்பு அரணாக இருப்பதாக ஆனந்த் மீது தொண்டர்கள் அதிருப்திகளைக் கொட்டினார்கள். இருந்த போதும் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும் வைத்திருந்தார் ஆனந்த். இதனால் அவரை மீறி கட்சிக்குள் எதுவும் அசையாது என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் என அரசியலில் கரை கண்டவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வரிசையாக வந்து தவெக-வில் ஒட்டினார்கள். அவர்களுக்கு மாநிலப் பொறுப்புகளையும் தயங்காமல் வழங்கினார் விஜய். ஆனால், இவர்களெல்லாம் உள்ளே வந்த பிறகு கட்சிக்குள் ஆனந்தின் பிடி மெல்லத் தளர ஆரம்பித்தது.

மாவட்டச் செயலாளர்களை எல்லாம் புஸ்ஸி ஆனந்த் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கட்சிக்குள் புதிதாக வந்தவர்கள் விரும்பவில்லை. இதனால், தொழில்நுட்ப ரீதியாக கட்சிப் பொறுப்பாளர்களை தன்னை நோக்கித் திருப்பும் விதமாக கட்சிக்குள் சில செயல்திட்டங்களை அமல்படுத்தினார் ஆதவ் அர்ஜுனா.

அதேபோல், நிர்மல்குமாரும் கட்சியின் பிரச்சார முகமாக பொதுவெளிகளில் பேச ஆரம்பித்தார். ஆனால், இவை எல்லாம் ஆனந்துக்கு அவ்வளவாய் பிடிபடவில்லை. அவர்களைப் போல பேசவும் அவருக்கு வரவில்லை. இதனால் இவர்களுக்குள் கருத்து மோதல்களும் அவ்வப்போது தலை தூக்கின.

இவர்களுக்கு மத்தியில் தவெக-வுக்கு வியூகம் வகுக்க வந்த ஜான் ஆரோக்கியசாமியும் தன் பங்குக்கு அரசியல் செய்ய ஆரம்பித்தார். புஸ்ஸி ஆனந்த் குறித்து அவர் பேசியதாக வெளியான ஆடியோவும் சர்ச்சைகளுக்கு சக்கரம் கட்டியது. இதனால் ஒருகட்டத்தில், விஜய்யைத் தவிர மற்ற யாரும் ஆனந்தை விரும்பாத சூழலும் இயல்பாகவே உருவானது.

இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் என மூன்று பேரும் மூன்று திசையில் நின்று கொண்டு கட்சிக்குள் தங்களுக்கான செல்வாக்கை தனித் தனியாக தக்கவைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதில், ஆனந்துக்கு ஆதரவாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் ஆதவுக்கும் நிர்மலுக்கும் இடையில் தனியாக ஒரு போட்டி நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள் சிலர், “முன்பு புஸ்ஸி ஆனந்தே அனைத்தையும் கவனித்து வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொறுப்புகளை பலருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார் விஜய். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறார்.

இதுவே, ஆனந்தை ஓரங்கட்டுவதற்கான முதல் படி மாதிரித்தான் தெரிகிறது. இதை தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி என ஆளாளுக்கு செல்ஃப் கோல் அடிக்கப் பார்க்கிறார்கள். ” என்றனர்.