வென்றவருக்கு சீட் இல்லை… புதுக்கோட்டைக்கு இப்படி ஒரு சென்டிமென்டா?

27 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், மாவட்ட தலைநகரான புதுக்கோட்டை தொகுதிக்கு மட்டும் விநோதமான ஒரு சென்டிமென்டைச் சொல்கிறார்கள்.

1996-க்கு பிறகு, இங்கு எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற யாருக்கும் மீண்டும் சீட் கிடைத்தாலும் ஜெயிப்பதில்லை என்பது தான் அந்த சென்டிமென்ட். புதுக்கோட்டையில் 1977 மற்றும் 1980-ல் காங்கிரஸ் சார்பில் ராஜகுமார் விஜயரகுநாத தொண்டமான் தொடர் வெற்றிகளைப் பெற்றார். அதன் பிறகு 1989 மற்றும் 1996-ல் திமுக வேட்பாளர் பெரியண்ணன் வெற்றி பெற்றார்.

பெரியண்ணனின் மறைவை அடுத்து 1997-ல் வந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் பி.மாரியய்யா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த தேர்தலில் இவருக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் 2006-ல் அதிமுக வேட்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் வெற்றிபெற்றார். இவருக்கும் 2011-ல் சீட் இல்லை.

அதேசமயம் 2001-ல் அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் அடுத்த தேர்தலில் புதுக்கோட்டையின் ஜாதகம் தெரிந்ததாலோ என்னவோ விராலிமலைக்கு ஜம்ப் ஆகிவிட்டார். புதுக்கோட்டையில் 2011-ல் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.பி.முத்துக்குமரன் ஓராண்டிலேயே விபத்தில் உயிரிழந்தார்.