லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி ; பலர் காயம்!

29 0

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலையடுத்து ஐன் எல் ஹில்வே (Ein el-Hilweh) பகுதியில் பெரும் பதற்றநிலை காணப்படுவதோடு, அங்கு அவசரகால பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முகாம் அமைந்துள்ள நெரிசலான தெருக்களில் நோயாளர் காவு வாகனங்கள் வந்துபோகிற காட்சிகளும்  தாக்குதலால் பெரும் புகைமூட்டம் நிலவிய காட்சிகளும் காணொளிகளாக பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.

நேற்றிரவு குறித்த அகதி முகாம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐன் எல் ஹில்வே பகுதியில் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்தே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், அதை மறுக்கும் ஹமாஸ், குறித்த பாலஸ்தீன முகாம் காணப்படும் பகுதியில் எந்த ஆயுதக் குழுவும் இல்லை என்றும் இஸ்ரேலால் தாக்கப்பட்டிருக்கும் பகுதி ஒரு திறந்த விளையாட்டு மைதானம் என்றும்  தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. பின்னர், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இஸ்ரேல் – லெபனான் நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இருப்பினும், லெபனானின் தெற்கில் 5 இடங்களில் இஸ்ரேல் தனது படைகளை நிறுத்தியுள்ளது. அங்கிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருகிறது. தற்போது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேல் படைகள் குவிந்துள்ள தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் கொண்டுள்ள ஆயுதங்களை குறைக்கவேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது. இந்நிலையிலேயே நேற்று வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருந்தது.

முன்னதாக லெபனானின் யாரோன் பகுதியில் இஸ்ரேல் எழுப்பிய பாதுகாப்புச் சுவரை இஸ்ரேல் அகற்றவேண்டும் என ஐ.நா வலியுறுத்தியதையடுத்து, இஸ்ரேல் விமானப்படை லெபனானை நோக்கி தாக்குதல் நடத்தியிருப்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.