முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளான அப்போதைய ஆட்சியாளர்களையும், படைத்தரப்பினரையும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தி, தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஒத்துழைக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்மீதான குழுநிலைவிவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ஒவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு பன்னாட்டு நீதி வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலமாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைச் செயற்பாட்டைக் காண்கின்றோம்.
அத்தகைய முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளான அப்போதைய ஆட்சியாளர்களையும், படைத்தரப்பினரையும் பன்னாட்டு நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கும், தமிழ் இனப்படுகொலைக்கான நீதியைப்பெற்றுத் தருவதற்கும் இந்த அரசானது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமென இவ்வுயரிய சபையின் ஊடாகக் கோருகின்றேன் என்றார்.

