மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம்.
கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான். மதிமுக-வில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் திமுக-வில் இணைய வேண்டும் என்றே விரும்பினர். அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மாறும் என்பதால் அதை செய்யவில்லை.
ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவது போல், ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார். திமுக-விலும் வாரிசு அரசியல் என்று பேசினாலும், திமுக-வில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு இருக்கிறது. துரை வைகோவிடம் அது இல்லை. கூட்டணி குறித்து தற்போது நாங்கள் சிந்திக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். கூட்டணியில் அணி மாறிக்கொண்டே இருந்ததால் மதிமுக பலவீனமானது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார்.
வைகோ போதைக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திமுக ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது போதைப் பொருளுக்கு எதிரான நடைபயணம் என்றால் திமுக-வுக்கு எதிராகப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது. தவெக-வுக்கு காட்டாறு போல் வரும் கூட்டத்தை விஜய் ஜனநாயக ரீதியாக அரசியல் படுத்தினால் ஜீவாதார பிரச்சினைகளுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

