திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கவலையடைகிறேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எமது மாவட்டமான திருகோணமலையில் நடக்க கூடாத, தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலில் இந்த சம்பவத்துக்கு நான் கவலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு தரப்பினர் இதனை இனவாதமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.அத்துடன் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்ட வகையில் சேறுபூசுகிறார்கள்.அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சேவையில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுப்படுத்த அமைச்சு மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார்.

