ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய பணிப்பாளர் சபை மற்றும் பொதுச்சபை பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் பொது எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் நேற்று (16) நடைபெற்றது. இதில் பொது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 68 பிரதிநிதிகளும், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 32 பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி, ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரத்தை பொது எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.
ஹக்மனை கூட்டுறவுத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் துஷார விதானகம கும்பல்கொட வட்டாரத்திற்காக போட்டியிட்டார். அத்துடன், ஹக்மனை பிரதேச சபையின் உபதலைவர் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹக்மனை வட்டாரத்திற்காகப் போட்டியிட்டார்.
ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 37 வட்டாரங்கள் இருந்தாலும், தற்போது 17 வட்டாரங்கள் மட்டுமே இயங்குகின்றன.
ஹக்மனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் 14 கிராமிய வங்கிக் கிளைகள், ஒரு ‘கோப் சிட்டி’, நான்கு ‘மினிகோப் சிட்டிகள்’, இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள், ஒரு ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையம், ஒரு பகல்நேர பராமரிப்பு நிலையம் மற்றும் ஒரு தேங்காய் எண்ணெய் ஆலை ஆகியவை உள்ளன.
உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் 100 பொதுச் சபை பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த 100 பேரில் இருந்து ஏழு பேர் பணிப்பாளர் சபைக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

