ஜேர்மன் நீதிமன்றம், சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக Google நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கில், ஜேர்மனியின் விலை ஒப்பீட்டு தளங்களான Idealo மற்றும் Producto ஆகியவை கூகுளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தன.
Google தனது Google Shopping சேவையை முன்னிலைப்படுத்தி, போட்டியாளர்களின் தளங்களை பின்தள்ளியதாகவும், இது சந்தை போட்டியை பாதித்தது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, Google, Idealo-விற்கு 465 மில்லியன் யூரோ மற்றும் Producto-விற்கு 107 யூரோ மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும்.
Idealo நிறுவனம், 2025-ல் கூகுளுக்கு எதிராக குறைந்தது 3.3 பில்லியன் யயூரோ இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தது.
ஆனால், நீதிமன்றம் வழங்கிய தொகை, “உண்மையான சேதத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே” என Idealo தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் அல்ப்ரெக்ட் வான் சோன்டாக், “சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்துவது லாபகரமான வணிக மாதிரியாக மாறக்கூடாது” எனக் கூறினார்.
இது கூகுளுக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் பிரச்சனை அல்ல. முன்னதாக, Google Flights மற்றும் Google Hotels சேவைகளிலும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், கடந்த மாதம், ஐரோப்பிய கமிஷன் Google-க்கு விளம்பர தொழில்நுட்பத்தில் போட்டியின்மை காரணமாக 3 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது.
கூகுள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், 2017-ல் போட்டியாளர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு, ஐரோப்பிய சந்தையில் டிஜிட்டல் ஆதிக்கம் மற்றும் போட்டி சட்டம் தொடர்பான முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

