நுகேகொடையில் எதிர்வரும் (21) நடைபெறவுள்ள பேரணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார, பெபிலியான புராண ராஜமஹா விகாரையை மையமாக கொண்டு ஊடக சந்திப்பு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (16) நடத்தினார்.
அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,
இந்த ‘திசைகாட்டி’ அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முக்கிய பங்களிப்பை வழங்கியவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள். நமது நாட்டின் டொலர் கையிருப்புகளை வலுப்படுத்தும் முக்கிய ஆதாரம், வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் (remittances) ஆகும்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுர குமார மீதும், ‘திசைகாட்டி’ மீதும் நம்பிக்கை வைத்து, வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலட்சியத்தை உருவாக்க, தங்கள் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்து, விடுமுறை எடுத்து, சுப நேரத்தில் நாட்டை அனுரவிடம் ஒப்படைக்க வாக்களித்தனர்.
எனினும், 12 பௌர்ணமி மாதங்கள் கடந்து, அரசாங்கம் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்கும்போது, திசைகாட்டியானது வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஏமாற்றியுள்ளது என்பது தெளிவாகிறது. தேர்தலில் முன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கிய ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட இவர்கள் நிறைவேற்றவில்லை.
தேர்தலுக்கு முன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், இந்த 2026 வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த ஒரு ரூபா கூட ஒதுக்கப்படவில்லை.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொருத்தமான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதாக கூறப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்காக ரூபா 2 பில்லியன் (2000 மில்லியன்) மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனுக்கும் அதிகம். பதிவு செய்யப்படாத மேலும் 5 லட்சம் பேர் இருக்கின்றனர்.
அந்த 5 லட்சத்தை மறந்துவிட்டு, 2000 மில்லியனை 1.8 மில்லியனால் வகுத்தால், ஒரு தொழிலாளிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் ரூ. 1100/- மட்டுமே. “இந்த ரூ. 1100/-க்கு என்ன ஓய்வூதியம் வழங்க முடியும்?” என்று விஜேத்த ஹேரத்திடம் நாங்கள் கேட்கிறோம். கடந்த 76 வருடங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களை இப்படி ஏமாற்றிய ஒரு அரசாங்கம் இருந்ததில்லை.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அவர்கள் தங்கியுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதாக முன்பு கூறப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பார்க்கும்போது, வாக்களிக்கும் உரிமையை வழங்குவதாகக் கூறி வெளிநாட்டு தொழிலாளர்களைத் தீவிரமாக ஏமாற்றியுள்ளனர் என்று தெரிகிறது.
சம்பள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சிரமங்கள்: தேர்தலின் போது ‘திசைகாட்டியின்’ கொள்கை அறிக்கையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சிரமங்களை இராஜதந்திர மட்டத்தில் தலையிட்டு நீக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் சம்பளம்-சிரமங்கள் தீர்க்கும் வேலை பற்றி பேசக்கூட இல்லை. தூதரகங்களில் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான ஏராளமான வீட்டுப் பணிப்பெண்கள் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், அவர்கள் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. அந்த அப்பாவிகளின் கண்ணீருக்கு மோசடி செய்யாமல், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு விஜேத்த ஹேரத்தை வலியுறுத்தி கேட்க விரும்புகிறோம்.
அடுத்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் சுங்க வரிச் சலுகைகளை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

