வத்திக்கான் அருங்காட்சியகங்களில் நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, கனடாவின் பழங்குடி சமூகங்களுக்குச் சொந்தமான 62 கலைப்பொருட்கள் அந்தநாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொல்பொருட்களில் இனுவிட் படகு, வாம்பம் பட்டிகள், போர் ஆயுதங்கள் மற்றும் முகமூடிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கத்தோலிக்க பாடசாலைகளில் கலாசார அடக்குமுறை மற்றும் துஷ்பிரயோகம் நடந்த காலகட்டத்தில், கத்தோலிக்க திருப்பணியாளர்களால் இந்தப் பொருட்கள் வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் இனுவிட் படகு, 1925ஆம் ஆண்டு வத்திக்கான் மிஷனரி கண்காட்சிக்காக அனுப்பப்பட்டதாகும்.

2022ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்க பாடசாலைகளில் நடந்த துஷ்பிரயோகங்களுக்கு “இனப்படுகொலை” என்று மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்தே, இந்தக் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த 62 பொருட்களை, “சகோதரத்துவத்தின் ஒரு அடையாளம்” என்று குறிப்பிட்டு வத்திக்கான், கனடாவின் கத்தோலிக்க ஆயர்களிடம் ஒப்படைத்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், இது “நல்லிணக்கம் நோக்கிய ஒரு முக்கியமான படி” என்று வரவேற்றுள்ளார்.
கனடாவில் 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு இறுதி வரை சுமார் 150,000இற்கும் மேற்பட்ட பழங்குடி சிறுவர்கள் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டனர்.
ஐரோப்பிய – கனேடிய கலாசாரம்
இந்தப் பாடசாலைகளின் முக்கிய நோக்கம், பழங்குடி சிறுவர்களை அவர்களின் சொந்த மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களிலிருந்து பிரித்து, அவர்களை வலுக்கட்டாயமாக ஐரோப்பிய – கனேடிய கலாசாரத்தில் ஒருங்கிணைப்பதாகும்.
இதன் விளைவாக, இந்தப் பாடசாலைகளில் படித்த சிறுவர்கள் மீது ஆசிரியர்கள் மற்றும் திருச்சபை ஊழியர்களால் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான வன்முறைகள் பரவலாக இழைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவரக்ள் இறந்தனர் எனவும் மேலும் பலர் புதைகுழிகளில் பெயரின்றி அடக்கம் செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலை நடவடிக்கைகள் ஒரு கலாசார இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படுகின்றன.
இந்த வரலாற்றுத் தவற்றுக்காக, 2022ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கனடாவுக்குச் சென்று கத்தோலிக்க திருச்சபையின் பங்குக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத்தக்கது.

