2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் (PFMA) பிரிவு 21 இன் தாக்கம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) நிதி மற்றும் நிறுவனச் சுதந்திரத்தை சீர்குலைக்கிறது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) கரிசனை தெரிவிக்கிறது.
பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் (PFMA) பிரிவு 21க்கு அமைய, ஒவ்வொரு வரவுசெலவுத்திட்ட நிறுவனமும் (budgetary entity) தங்கள் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை திறைசேரி வெளியிடும் “வரவுசெலவுத்திட்ட அழைப்பு சுற்றறிக்கைக்கு” ஏற்ப தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற கடப்பாடு உள்ளது. இப்பிரிவு, கட்டுப்படுத்தப்பட்ட செலவு வரம்புகளை நிர்ணயித்தல் (binding expenditure ceilings) விரிவான கொள்கை வழிகாட்டல்களை (policy guidance) வழங்குதல் மற்றும் திறைசேரியின் செயலாளருக்கு அவசியமானதாக கருதும் ஏனைய அறிவுறுத்தல்கள் அல்லது தகவல்களை உள்வாங்கும் அதிகாரத்தை நிதி அமைச்சுக்கு வழங்குகிறது.
முக்கியமாக, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், CIABOC ஒரு சுயாதீன ஆணைக்குழு என்ற அதன் நிலைக்கு இணங்க, தனது வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை நேரடியாகப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்திற்கு அமைய, CIABOC தனது வரவுசெலவுத்திட்டத்தை நிதி அமைச்சு ஊடாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பின்னர் அது வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் எந்தவொரு முதலீட்டுத் திட்டங்களுக்கும் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் நிறுவப்பட்ட பாதுகாப்புகளிலிருந்து ஒரு மிக முக்கியமான விலகலாகும் என்பதுடன், இது CIABOC இன் நிறுவன மற்றும் நிதி சுதந்திரத்தையும் பலவீனப்படுத்தும்.
இந்த ஏற்பாட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் நிதிசார் ஒழுங்கு (fiscal discipline) மற்றும் அரசாங்க நிறுவனங்களில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை ஊக்குவிப்பதாக இருந்தாலும், இது நிறைவேற்றுத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து (executive control) தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய மற்றும் செயற்பாட்டு ஒருமைப்பாடு கொண்டிருக்கும் முக்கியமான மேற்பார்வை நிறுவனத்தின் சுதந்திரத்திற்கும் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. இலங்கையும் ஒரு உறுப்புநாடாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தில் ((UNCAC) தேசிய ஊழல் தடுப்பு நிறுவனங்கள் தங்களது செயற்பாடுகளை பயனுள்ள வகையில் மேற்கொள்ளத் தேவையான சுதந்திரம் மற்றும் வளங்களை உறுதி செய்ய வேண்டும் என (விதிகள் 6 மற்றும் 36) வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, போதிய, நிலையான மற்றும் சுயாதீன நிதியுதவி ஆகியவை தகாத செல்வாக்குகளை (undue influence) தவிர்க்கவும் செயற்பாட்டு ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் முக்கியமானவை என ஜகார்த்தா ஊழல் தடுப்பு நிறுவனக் கொள்கைகள் (Jakarta Principles on Anti-Corruption Agencies) தெளிவாக குறிப்பிடுகின்றன.
இலங்கையில் ஊழலுக்கு எதிராகச் செயற்படும் பிரதான அமைப்பாக (CIABOC), தனது பணிகளை நிறைவேற்றும் பொருட்டு, பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான நிலையில், தனது நிதி வளங்களை சுயமாக திட்டமிடவும், ஒதுக்கவும், நிர்வகிக்கவும் முடியும் வகையில் இருக்க வேண்டும். முன்னுரிமைகளை தீர்மானிக்கும் மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்தும் திறன், வெளித்தாக்கம் இல்லாமல், கணிப்பிடக்கூடிய நிதி அணுக்களில் தங்கியுள்ளது. திறைசேரி வெளியிடும் சுற்றுநிருபம் மூலம் ஆணைக்குழுவின் வரவுசெலவுத்திட்டத்திற்கு உச்சவரம்பு மற்றும் விதிமுறை சார்ந்த கொள்கை வழிகாட்டுதல் விதிப்பது, ஆணைக்குழுவின் நிதி தன்னாட்சியை (financial autonomy) நிறைவேற்றுத்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருகிறது. தற்போதைய வடிவில் பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவு 21 அமுல்படுத்தப்படுவது, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினூடாக கவனமாக வகுக்கப்பட்ட பாதுகாப்புகளை மீறுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது. CIABOC போன்ற ஒரு அமைப்பின் வரவுசெலவுத்திட்ட மற்றும் செயற்பாட்டு நெகிழ்வுத்தன்மை அமைச்சுசார் உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் போது, அதன் நடுநிலையான மற்றும் சுயாதீனமான செயற்பாட்டுத் திறன் தவிர்க்க முடியாமல் பாதிக்கப்படுகிறது. இது இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சி குறித்த அரசின் அர்ப்பணிப்புக்கு பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் (PFMA) போன்ற, பொது நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் உள்ளடங்கிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது, நிதிசார் நேர்மையுடனும் ஊழல் எதிர்ப்புப் பொறுப்புடனும் இயங்கும் நிறுவனங்களின் சுயாதீனம் குறைக்கப்படாமல், மாறாக அது மேலும் வலுப்படுத்தப்படுவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் மற்றும் ஏனைய அனைத்துச் சட்டங்களின் மூலம், மேற்பார்வை அமைப்புகள் மற்றும் CIABOC போன்ற அமைப்புகளைப் பாதுகாக்க நிறுவப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் (Safeguards) எவ்விதத்திலும் பாதிக்கப்படவோ அல்லது சிதைக்கப்படவோ கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என TISL நிறுவனமானது அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறையை கோருகின்றது. சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களுடன் புதிய சட்டவாக்கங்களை தொடர்புபடுத்தும் போது, அரசாங்கம் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களால் நிறுவன சுதந்திரம் கவனக்குறைவாகவோ அல்லது தற்செயலாகவோ பலவீனமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, சட்டங்களை வரைவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பங்கேற்பை உறுதி செய்வது அவசியம்.

