மேலதிகமாக வேலை செய்வதற்கு ரூ. 200 போதுமானது அல்ல, இது நியாயமுமல்ல!

26 0

தோட்டங்களில் மேலதிகமாக வேலை செய்யுமாறு கோரப்பட்டுள்ள விடயத்தை தொழில் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், அவ்வாறு மேலதிகமாக வேலை செய்வதற்கு வரவு – செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்டுள்ள ரூ. 200 போதுமானது அல்ல என்று கூறுவதோடு, இது நியாயமில்லை என்ற விடயத்தை செயலாளரும் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமான் நேற்று (13) ஊடகங்களிடம் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் ரூ. 200 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், “இந்த அதிகரிப்பை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்” என்றார்.

சம்பள உயர்வு தொடர்பான விடயங்கள் குறித்து நேற்று முன்தினம் (12) தொழில் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில், “தோட்டங்களில் மேலதிகமாக வேலை செய்யுமாறு கோரப்பட்டுள்ள விடயத்தை” அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மேலதிகமாக வேலை செய்வதற்கு இந்தத் தொகை (ரூ. 200) போதுமானது அல்ல. இது நியாயமில்லை என்பதை செயலாளரும் ஏற்றுக்கொண்டதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்றுப் பேசிய அவர், நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும், தோட்ட மக்களுக்கு சம்பளத்தை உயர்த்திய ஜனாதிபதி அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் ஆதரவளிக்கும்.

வரவு – செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்ட இந்தத் தொகையை நிறுவனங்களால் (கம்பனிகளால்) வழங்க முடியும். ஆனால், ‘முடியாது’ என்று சொல்வதுதான் கம்பனிகளின் வழக்கமாக உள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடியவை பத்திரிகைகளும் ஊடகங்களும் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.