இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதும் நிகழ்ச்சித் திட்டம்

21 0

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்முயற்சியின் கீழ் அண்மையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும் கலந்துகொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, சேவைகளைப் பெறுவதற்காக தம்மிடம் வரும் இயலாமையுள்ள நபர்களை மனிதாபிமானத்துடன் கருதி, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குமாறு அனைத்து அரச அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

இயலாமையுள்ள நபர்களின் தேவைகளைக் கண்டறிய, அவர்களின் நிலையில் இருந்து பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு உண்மையில் என்ன தேவைகள் உள்ளன என்பதைச் சரியாக அடையாளம் காண முடியும் என்றும், சேவைகளைப் பெற வரும் இயலாமையுள்ள நபர்களின் புன்னகையில் உங்கள் தொழிலில் திருப்தியைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இயலாமையுள்ள நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்தக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.