அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு – சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

40 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதி சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லின் டொலர்களைப் பறிக்கும் முயற்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார்.

“அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வோர் ஆண்டும் ஆளுங்கட்சி அந்த ஆண்டுக்கான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் ஒப்பந்தத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரை அனைத்தும் பாதிக்கும்” என்றவாறு இவ்வாண்டு ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பித்தபோது, ட்ரம்ப் அரசு சுகாதார திட்டத்துக்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்த்தனர். இதனால் மொத்த செலவின மசோதாவும் ஒப்புதல் பெற முடியாமல் அமெரிக்க அரசு முடக்கத்தை எதிர்கொண்டது. நிதி முடக்கம் காரணமாக பல துறைகள், சேவைகள் இயங்காததோடு, பல அரசு உத்தியோகத்தர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

நிதி இல்லாததால் ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்துகொண்டது. இதனால் பல்வேறு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவில் வேலையின்மை பிரச்சினை பாரியளவில் அதிகரித்தது. 4.6 வீதமாக இருந்த சராசரி வேலையின்மை பிரச்சினை 6 வீதமாக உயர்ந்தது.

ட்ரம்பின் பிடிவாதமே இந்த வேலையின்மை பிரச்சினை அதிகரிக்க காரணம் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி சட்டமூலத்தை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும் எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அத்தோடு, தங்களின் முக்கியமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் ஜனநாயக கட்சியினரில் ஆறு பேர் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சட்டமூலம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்தது. இதன் மூலம் தற்காலிகமாக 2026 ஜனவரி 30ஆம் திகதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்தே, 43 நாள் அமெரிக்க அரச முடக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து, அரசு அலுவலகங்கள் மீண்டும் வழமைபோல் இயங்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றுத் தகவல்களின்படி, 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப்பின் ஆட்சியில் 2018 – 19 ஆண்டு காலப்பகுதியில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.