டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
“டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிப்பதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்டவேண்டும்” என மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் டெல்லி, செங்கோட்டைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி இரவு வெடிபொருட்களை கொண்டுசென்ற கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
இவ்வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பில் டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வெடிப்பு சம்பவம் என்பதால் பின்னர், உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

