மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் அக்ரா நகரில் புதன்கிழமை (12) நடைபெற்ற இராணுவத்துக்கு வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான முகாம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததோடு 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கானா நாட்டு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் உள்ள ஒரு மைதானத்தில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த முகாமுக்கு இராணுவத்தில் இணைந்துகொள்ளும் ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி வாயில்களுக்குள் விண்ணப்பதாரர்கள் நுழைந்த காரணத்தினாலேயே சன நெரிசல் ஏற்பட்டதாக அந்நாட்டு இராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொழில் வாய்ப்பின்மையால் கானா நாட்டில் 32 வீதமான இளைஞர்கள் அதிகளவு சிரமங்களை எதிர்கொண்டு வருவதன் காரணமாக, அங்கு நடத்தப்படும் இதுபோன்ற ஆள்சேர்ப்பு முகாம்களுக்கு அதிகளவு மக்கள் சென்று குவிகின்றனர்.
குறைந்த எண்ணிக்கையிலானோரை இணைத்துக்கொள்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம்களில் கூட தொழில் பெறும் ஆர்வத்தோடு அதிக எண்ணிக்கையானோர் சென்று பங்கேற்க காத்திருப்பதால் இதுபோன்ற சன நெரிசல் ஏற்படுவதாகவும் அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



