ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் கடந்த 19 நாட்களாகக் காணாமல் போயிருந்த இந்திய மருத்துவ மாணவர் அஜித் சிங் சௌத்ரி (22), வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து மர்மம் நீடிப்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் சிங் சௌத்ரி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (Bashkir State Medical University) எம்பிபிஎஸ் படித்து, விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, காலை 11 மணியளவில் பால் வாங்கி வருவதாகக் கூறி விடுதியில் இருந்து வெளியேறிய அவர், அதன் பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை.
இது தொடர்பாகப் ரஷ்யப் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 19 நாட்களுக்குப் பிறகு, வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அஜித்தின் உடல் சக நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. இதற்கு முன்னதாக, அவர் காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு, அவரது உடைகள், மொபைல் ஃபோன் மற்றும் காலணிகள் ஆற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காணியை விற்று அஜித்தை ரஷ்யாவுக்குப் படிக்க அனுப்பிய நிலையில், அவர் உயிரிழந்த செய்தி குடும்பத்தினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் இந்திய அரசாங்கத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித்தின் மரணத்திற்குப் பின்னால் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் முறையான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர சிங் அல்வார் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். சில தகவல்களின்படி, மாணவர் ஆற்றில் குதித்திருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருப்பது சந்தேகத்தை அதிகரிப்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
அஜித் சிங் சௌத்ரியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தது. அவரது உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக, பிரேதப் பரிசோதனை அறிக்கை உட்பட அனைத்துச் சட்ட நடைமுறைகளையும் ரஷ்ய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

