கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , துப்பாக்கி சூட்டினை நடாத்திய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

