உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

22 0

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறுவனத்தில் மேலும் 7 ஆண்டுகள் சேவையை தொடர்வது உறுதியாகியுள்ளது.

தற்போது 1.5 ட்ரில்லியன் டொலராக உள்ள  டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பினை, 8.5 ட்ரில்லியன் டொலராக உயர்த்தவேண்டும் என்ற நிபந்தனையோடு எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த சம்பளத்தை பணமாக அல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக எலான் மஸ்க்கின் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டெஸ்லா கார்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே எலான் மஸ்க்  அதிகப்படியான ஊதியமாக, ஒரு ட்ரில்லியன் டொலரை கேட்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கைக்கு நிறுவன பங்குதாரர்கள் இணங்கியுள்ள நிலையில், கேட்டபடி ஊதியத்தை எலான் மஸ்க் பெற்றுவிட்டால், அவர்,  உலகிலேயே ஒரு ட்ரில்லியன் சொத்துக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக கருதப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.