யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (30) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரை ஆற்றிய அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்தி தேவைகளுக்கான அரசாங்க காணிகளை பிரதேச செயலக ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கான அனுமதி வழங்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ரீதியில் வடக்கு, கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்திடமிருந்து மக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றதாகவும், இதில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் அனுமதி பெற்ற பின்னர், பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்று, பின்னர் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதியையும் பெற்ற பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், குறிப்பாக வேலணை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் வனவளத் திணைக்களத்தின் கீழும் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, கரவெட்டி, மருதங்கேணி, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் உள்ளடக்கப்படுவதாகவும் அது தொடர்புடைய பிரதேச செயலாளர்கள் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமான மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த அளவு காணிகள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாமல் தயார் நிலையில் உள்ளவர்களை இதில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயங்களை உள்ளடக்கியதாக பிரதேச செயலாளர்கள் உடனடியாக விசேட பிரதேச மட்ட காணிப் பயனபாட்டுக் குழுக் கூட்டத்தை இரண்டு வார காலத்தினுள் நடாத்தி, பின்னர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முக்கியமாக இந்த காணிகள் பொதுமக்களுடைய காணிகளாகவும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி நோக்கிய செயற்றிட்டத்துக்கு தேவைப்படும் காணிகளாகவும் காணப்படுவதனால் விடுவிக்கப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நெடுந்தீவில் மூன்றில் ஒரு பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதனால், வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 4,562 ஏக்கர் காணியில் சுமார் 1,400 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுக்கமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


