நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பாதாளக்குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளன. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்.
ஆனால் ஒரு வாக்குறுதிகள் கூட இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் சட்டத்தின் ஊடாக பறிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் காலத்தில்தான் நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் அச்சடைந்திருந்தார்கள். ஆனால் தற்போது அரசியல்வாதிகள் பாதாளக் குழுக்களுக்கு அச்சமடைந்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
ஒரு இலட்சம் பேரையேனும் கொன்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம் என்று அரசாங்கத்தின் நகராதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒரு இலட்சம் பேரில் ஒருவரா வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர என்று கேட்கிறோம். இவர் படுகொலை செய்யப்பட்டதை அலட்சியப்படுத்தி, மனிதாபிமானமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் சேறுபூசுகிறது.
மரண தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மாத்திரமே உண்டு.அந்த மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. நிறைவேற்றுத்துறைக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தற்போது பாதாளக் குழுக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பாடுகள் தீவிரமடையும் போது அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது தனிப்பட்ட அரசியல் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாட்டை புறக்கணித்து ஒன்றுப்பட வேண்டும்.கடந்த காலங்களிலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை முடக்குவதற்கு அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்தை பயன்படுத்திக்கொள்கிறது. பொலிஸார் ஹிட்லரின் பொலிஸாரை போன்று செயற்படுகிறார்கள்.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துகிறார்கள் என்றார்.

